ஈரோடு: சிவகிரியில் வயதான தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்லடம் அருகே மூவர் கொல்லப்பட்ட வழக்கிலும் தொடர்புள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி(72), அவரது மனைவி பாக்கியம்(63) ஆகியோர் பணம், நகைக்காக ஏப்ரல் 28-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளைக் கண்டறிய ஈரோடு எஸ்.பி. சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமசாமி, பாக்கியம் தம்பதி கொலை வழக்கில் அறச்சலூர் வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த ஆச்சியப்பன்(48), தெற்கு வீதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (52), புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் ராமசாமி-பாக்கியம் தம்பதியை கொன்றதை ஒப்புக்கொண்டதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏப். 28-ம் தேதி நள்ளிரவில் ராமசாமி தோட்டத்துக்கு சென்று மின்சாரத்தை துண்டித்துள்ளனர். அப்போது வெளியே வந்த பாக்கியத்தை கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சப்தம் கேட்டு வந்த ராமசாமியையும், கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். பின்னர், பாக்கியம் அணிந்திருந்த பத்தே முக்கால் பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிஉள்ளனர்.
கொள்ளையடித்த நகையை சென்னிமலையைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், மரக்கட்டை, கொலையான ராமசாமியின் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான ஆச்சியப்பன் தோட்ட வேலை செய்வதுபோல தனியாக உள்ள தோட்டங்களுக்குச் சென்று நோட்டமிட்டுள்ளார். அவர் அளிக்கும் தகவலின்பேரில் மூவரும் இணைந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் கொலை செய்து, நகையைத் திருடியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி(78), அவரது மனைவி அலமாத்தாள்(74), மகன் செந்தில்குமார்(44) ஆகியோர் 2024 நவம்பர் 28-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் தற்போது பிடிபட்ட மூவருக்கும் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவதால், நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து, விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் நடந்த மற்ற குற்ற சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம். இதுபோன்ற குற்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை பாராட்டு: சிவகிரி கொலை சம்பவத்தை எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் கண்டித்திருந்தனர். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சிவகிரியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, “வரும் 20-ம் தேதிக்குள் இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், சிவகிரியில் எனது தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், அவரது கெடுவுக்கு ஒருநாள் முன்னதாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, காவல் துறைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள அண்ணாமலை, உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.