க்ரைம்

பல்லடம் கொலை வழக்கில் தொடர்பு: ஈரோட்டில் பிடிபட்ட குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: ஈரோடு மாவட்டத்தில் கொலை குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு திருப்பூர் பல்லடம் தாய், தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்த நிலையில், கொலையானவரின் ஐபோன் குறித்து பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் 28-ம் தேதி அன்று புகுந்த கும்பல் தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு அம்மாள், மகன் செந்தில்குமார் என மூன்று பேரை கொடூரமாக அடித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த 8 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், எந்த விதமான தடயங்களும் இல்லாமல் போலீஸார் திணறினர். 100 நாட்களைக் கடந்த நிலையில் வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இதே பாணியில் கொலை ஒன்று நடந்திருந்தது. தோப்பு வீடு, தனியே இருக்கும் முதியவர்கள், வீட்டின் அருகாமையில் பாசன வாய்க்கால், சிசிடிவி இல்லாதது என முந்தையக் கொலையின் அனைத்தும் ஒத்துப்போனது. மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் ஒரே பாணியில் இருந்ததுதாகக் கூறப்படுகிறது.

தொடர் விசாரணையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் தற்போது பிடிபட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு திருப்பூர் சேமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற மூவர் கொலையில் தொடர்பிருக்கிறதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் வைத்திருந்த ஐபோன் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான நபர்கள் செல்போனை கிணற்றில் வீசி விட்டோம் என வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அவர்களை அழைத்து வந்து ஐ போன் மீட்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT