பல்லாவரம் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் வசித்து வருபவர் நானி (40). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டின் பீரோ சாவி திடீரென தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாற்று சாவி தயார் செய்து, பீரோவை திறப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பாலா (25) என்ற இளைஞரை நானி அணுகினார். பாலா சற்று நேரம் கழித்து வந்து ரிப்பேர் செய்வதாக கூறினார். அதன் பின்னர் நானி வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டில் அவரது 17 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார்.
அந்த நேரத்தில் பீரோவை ரிப்பேர் செய்வதற்காக பாலா வந்திருந்தார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த பாலா, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, திரண்டு வந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பாலாவிடம் இருந்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் பாலாவை சங்கர் நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் பாலா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 9ம் தேதியும் இதே போன்று பொழிச்சலூரில் 13 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.