முகவரி கேட்பதுபோல் நடித்து கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்து தப்பிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண், தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 14-ம் தேதி தனது ஆண் நண்பருடன் அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாணவியிடம், லயாலோ கல்லூரிக்கு செல்வது எப்படி என்று முகவரி கேட்டுக் கொண்டே, அப்பெண் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அவர்களை பின் தொடர்ந்தும் பிடிக்க முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த மாணவி, இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மாணவியின் கவனத்தை திசை திருப்பி செல்போனை பறித்து தப்பியது சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த பரத் என்ற பரத்குமார் (23), அசோக்நகரை சேர்ந்த தர்ஷன் (22) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த இருவரை யும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பரத் மீது ஏற்கெனவே கொலை, அடிதடி என 2 குற்ற வழக்குகளும், தர்ஷன் மீது வழிப்பறி, கஞ்சா, அடிதடி உட்பட 7 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.