கரூர் அருகே நேற்று விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து மற்றும் சுற்றுலா வேன். 
க்ரைம்

ஆம்னி பேருந்து- சுற்றுலா வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்த விபத்து: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆம்னி பேருந்து-சுற்றுலா வேன் மோதிக் கொண்டதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் காயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்து புறப்பட்டது. கரூர் அருகே நாவல் நகர் பகுதியில் நேற்று அதிகாலை சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதிய பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையத் தடுப்பைத் தாண்டி, மறுபக்க சாலைக்குச் சென்று, எதிரே கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது மோதியது.

இதில் சுற்றுலா வேன் ஓட்டுநர் சசிகுமார்(52), சுற்றுலா அமைப்பாளர் அருண் திருப்பதி(45), இவரது மகன் அஸ்வின் காமாட்சி(10), எழில் தட்சியா(15) ஆகிய 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 23 பேர், டிராக்டர் ஓட்டுநர், ஆம்னி பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 32 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சென்ற கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகள் ஹேமவர்ஷினி (20) என்பவர் உயிரிழந்தார்.விபத்து குறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ரூ.3 லட்சம் நிவாரணம்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “கரூர் சாலை விபத்​தில் 5 பேர் உயி​ரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்​பத்​தினருக்​கும், உறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.3 லட்​சம், பலத்த காயமடைந்​தோருக்கு ரூ.1 லட்சம், காயமடைந்​தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT