கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சி 2 மான்களை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சின்ன சூலாமலையை சேர்ந்த விவசாயி ராஜா(45). வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது விவசாய நிலத்திற்கு இரவில் மான்கள் வந்து செல்வது வழக்கம். இதுகுறித்து அவரது உறவினரான பாலேப்பள்ளியை சேர்ந்த முருகன்(47) என்பவரிடம் ராஜா தெரிவித்தார்.
தொடர்ந்து, இருவரும் சேர்ந்து மின்சாரம் பாய்ச்சி மான் வேட்டையாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று ராஜாவின் விவசாய நிலத்தில் கம்பிகள் கட்டி, அதில் மின்சாரத்தை பாய்ச்சி உள்ளனர். இன்று அதிகாலை விவசாய நிலத்திற்கு உணவு தேடி வந்த இரு மான்கள், மின்கம்பியில் சிக்கி உயிரிழந்தது. ராஜாவும், முருகனும் உயிரிழந்த மான்களின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். தகவலறிந்து, கிருஷ்ணகிரி வனவர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, மான்களின் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.