சென்னை: நட்சத்திர ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.23 கோடி வைரக் கல்லுக்கு பதிலாக, போலீஸார் போலி வைரத்தை கொடுத்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாபாரி புகார் அளித்தார்.
சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் பெற்று வைத்திருந்தார். அந்த வைரக்கல்லை ரூ.23 கோடிக்கு விற்பதற்கு விலை பேசி வந்தார். அந்த வைரக்கல்லை விற்பதற்கு சந்திரசேகர் 4 முகவர்களிடம் பேரம் பேசினார்.
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 முகவர்களும் திடீரென கொள்ளையர்களாக மாறி வைர வியாபாரி சந்திரசேகரை தாக்கி, ஓர் அறையில் கட்டிப்போட்டுவிட்டு வைரக்கல்லை கொள்ளையடித்து தப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக வடபழனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
வைரக்கல்லை கொள்ளையடித்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஜான் லாயிட், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காட்டையை சேர்ந்த ரத்தீஷ் ஆகிய 4 பேரும் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களிடமிருந்து வைரக்கல் மீட்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைர வியாபாரி சந்திரசேகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மீண்டும் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ``கொள்ளையர்களிடமிருந்து போலீஸார் மீட்டுத் தந்த வைரக்கல் உண்மையானது இல்லை; அது போலியானது. இதுபற்றி வடபழனி போலீஸாரிடம் கேட்டபோது, அவர்கள் மிரட்டுகிறார்கள். உண்மையான வைரக்கல்லை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனுவை காவல் ஆணையர் சார்பில் பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வைரக்கல்லை மீட்ட வடபழனி போலீஸார் கூறும்போது, ``கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட வைரக்கல்லை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டோம். சந்திரசேகர் கொடுத்துள்ள புகாரில் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை'' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்திரசேகர் சொல்வது உண்மையா அல்லது பொய்யா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையை சேர்ந்த அவரது நண்பர். அவரிடம் விசாரித்தால் உண்மை தெரியும் என்பதால் அவரிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.