தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை 6.30 மணியளவில் நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பொது மருத்துவர் கண்ணன், வழியில் இருந்த கிரில் கேட்டை அடித்துக் கொண்டே வந்துள்ளார். தொடர்ந்து, புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முதியவருக்கு சிகிச்சை பெறுவதற்காக அங்கு காத்திருந்தார். மருத்துவர் கண்ணன் குடிபோதையில் இருப்பதைப் பார்த்து, தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த பிற மருத்துவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
நோட்டீஸ் விநியோகம்.. இதையடுத்து, பணியில் இருந்த மருத்துவர் கண்ணன் மாற்றப்பட்டு, புறநோயாளிகளுக்கு மருத்துவர் ரமேஷ் என்பவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவர் கண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.