சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன் மேலும் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவினர் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மகளிர் நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஞானசேகரன் மேலும் ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன்படி, அவர் மீது தற்போது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை சிபிசிஐடி போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.