க்ரைம்

வளசரவாக்கத்தில் நடந்த தீ விபத்தில் மாடியிலிருந்து குதித்து தப்பிய பணிப்பெண்ணும் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: வளசரவாக்கம் தீ விபத்தில் 2 பேர் மரணம் அடைந்திருந்த நிலையில் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பிய பணிப்பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர், நான்காவது தெருவில் 2 தளங்கள் கொண்ட சொகுசு பங்களா உள்ளது. இந்த வீட்டில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன் (78), அவரது மனைவி தங்கம் (73). மகன் ஸ்ரீராம் (50), மருமகள் ஷியாமளா (45), பேத்தி ஸ்ரேயா (20), பேரன் ஷர்வன் (17) வசிக்கின்றனர்.

கடந்த 11-ம் தேதி ஸ்ரீராம், அவரது மனைவி மற்றும் மகளுடன் அடையாறு சென்றார். வீட்டில் உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்த தங்கம், நடராஜன் மற்றும் அவர்களது பேரன் ஷர்வன், வீட்டு வேலை செய்யும் பெண் ராமாபுரத்தை சேர்ந்த சரஸ்வதி (26) ஆகியோர் இருந்தனர். மதியம் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நடராஜன், அவரது மனைவி தங்கம் உயிரிழந்தனர்.

ஷர்வனும் சரஸ்வதியும் முதல் தளத்திலிருந்து குதித்து உயிர் தப்பினர். இருப்பினும் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பணிப்பெண் சரஸ்வதி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வளசரவாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT