சென்னை: சென்னை பரங்கிமலையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, புதுச்சேரி விரைவு ரயில் மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் ராயல் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஜக் மகன் முகமது நவ்ஃபால் (21). இவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் மகன் சபீர் அகமது (20). இவர்கள் இருவரும் மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கணினி அறிவியல் இறுதியாண்டு படித்து வந்தனர். இருவரும் பரங்கிமலையில் டி.என்.ஜி.ஒ. காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
இவர்கள், பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து 30 மீட்டர் தெற்கே உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக, நேற்று காலை 7 மணியளவில் எழும்பூர் - தாம்பரம் வழித்தடத்தில் பரங்கிமலை ரயில் பாதையில் இடதுபுறத்தில் இருந்து வலது புறத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அதாவது, செல்போன் பேசியபடி, கவனக் குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற மெமு விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில், இருவரும் தூங்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, மாம்பலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாம்பலம் ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று, அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் இருவரின் உடல்களை போலீஸார் ஒப்படைத்தனர். கவனக் குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றதால், ரயில் மோதி மாணவர்கள் இறந்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.