அஸ்வின் 
க்ரைம்

சென்னை | துக்க நிகழ்ச்​சி​யில் ஏற்​பட்ட முன் விரோதம்: இளைஞரை கொலை செய்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன் விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தரமணி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தரமணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீஸாரின் தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டது தரமணியைச் சேர்ந்த அஸ்வின்(25) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை முன்னெடுத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 இளைஞர்கள், தரமணி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சரணடைந்தது தரமணி, அகஸ்தியர் தெருவைச் சேர்ந்த மோகனசுந்தரம்(26), அதே பகுதி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த பரத்ராஜ்(19), சங்கர்(23) என்பது தெரிந்தது. இவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், ``எங்களுக்கும் அஸ்வினுக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் சேர்ந்து அவரை மது குடிக்க வைத்து பட்டாக் கத்தியால் வெட்டி கொலை செய்தோம். பின்னர், அங்கிருந்து தப்பி பள்ளிக்கரணை சென்று அங்குள்ள குளத்தில் கத்தி மற்றும் அஸ்வினின் செல்போனை வீசிவிட்டு சென்றோம் என்றனர். இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலையான அஸ்வினுக்கும், நண்பர்களுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துக்க நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள 3 பேரையும் அடித்துள்ளார்.

எனவே மோகனசுந்தரம், சங்கர், பரத்ராஜ் ஆகியோர் அஸ்வினை பழிவாங்க திட்டம் தீட்டி அவரை மது குடிக்க அழைத்து, போதை தலைக்கேறியதும் மூவரும் சேர்ந்து கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர்.

SCROLL FOR NEXT