கோவை: கோவையில் சட்ட விரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10 பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் தங்கியிருப்பதாக மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், துடியலூர் போலீஸார், நேற்று (மே 11) மேற்கண்ட நிறுவனத்துக்கு சென்று அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் தாங்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில் பிடிபட்டவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்த லோடிப் அலி(29), சொரிப்(37) எனத் தெரிந்தது. இவர்கள் வங்கதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி மேற்குவங்க மாநிலத்துக்கு வந்தவர்கள் என்றும், பின்னர் அங்கிருந்து வேலைக்காக கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் நேற்று (மே11) இரவு கைது செய்தனர். மேலும், இவர்களுடன் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் தங்கியிருந்தனர். அவர்களைப் பிடித்து, அவர்கள் உண்மையிலேயே மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களா?, இவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர்?, எவ்வாறு இவர்கள் ஊடுருவி கோவைக்கு வந்தனர்? என்பன போன்ற தகவல்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.