க்ரைம்

தரமணியில் ஹெராயின் வைத்திருந்த திரிபுராவை சேர்ந்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தரமணியில் 14 கிராம் ஹெராயின் வைத்திருந்த திரிபுராவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தரமணி போலீஸார் நேற்று காலை சிஎஸ்ஐஆர் சாலை மற்றும் விவி கோயில் தெரு சந்திப்பில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை சோதனை செய்தனர். அவர்களது சட்டைப்பையில் 14 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுஹைல் உசேன் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT