திண்டுக்கல்: நான்கு மாநில போலீஸார் தேடிவந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டில் கொள்ளையடித்த நபர்களை 4 மாநில போலீஸாரும் தேடிவந்தனர்.
இவர்கள், திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், வடமதுரை பகுதியில் வீட்டில் வைர நெக்லஸ், வெள்ளிக் குத்துவிளக்கு உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க காவல் ஆய்வாளர் வினோதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தவர்கள், தாங்கள் திருடிய காரில் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி அருகே சென்றபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார்
சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த தன்ராஜ் என்ற தேவ் (28), அரவிந்த் (24), திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டுவைச் சேர்ந்த சுதாகர் (45) என்பதும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து வெள்ளிக் குத்துவிளக்கு, வைர நெக்லஸ், கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், கார் மற்றும் மங்கி குல்லா, கையுறை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர்களை 4 மாநில போலீஸார் கடந்த 2 ஆண்டுகளாக தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.