சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உயர்ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சட்ட படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர் உட்பட இருவர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபரிடம் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் 4 கிராம் ஓஜி (உயர் ரகம்) கஞ்சா வைத்திருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்நபர், வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எல்எல்பி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் அமித் என்பதும், அவர் சென்னை தி.நகர் ராமன் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கஞ்சாவை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்பவரிடம் இருந்து வாங்கியதாக சட்டப்படிப்பு படிக்கும் மாணவர் அமித் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து திருவான்மியூருக்கு விரைந்த தனிப்படை போலீஸார், மாணவர் அமித்துக்கு கஞ்சாவை விற்ற கிருஷ்ணா என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிராம் ஓஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணா, செங்குன்றம் பகுதியை சேர்ந்த சூர்யாவிடம் இருந்து கஞ்சாவை வாங்கியது தெரியவந்துள்ளது. அமித் மற்றும் கிருஷ்ணாவை கைது செய்த தனிப்படை போலீஸார் இவர்களுக்கு கஞ்சாவை விற்ற சூர்யா என்ற நபரையும் தேடி வருகின்றனர்.