செய்யாறு: செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தூசி போலீஸார் 2 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர் பிரபாவதி. இவரது கணவர் திருமலை(52). இவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்தார்.
இந்நிலையில், செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார். சோழவரம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திருமலையை வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில், கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த திருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலையடுத்து தூசி போலீஸார் விரைந்து சென்று திருமலையின் உடலைக்கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமலை, வழக்கு விசாரணைக்காக செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகிவிட்டு உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் கொலை செய்து வி்ட்டு தப்பியுள்ளது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன் விரோதம் காரணமா? - கொலையான திருமலைக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த ராஜாராம்(37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ராஜாராம், தனது கூட்டாளிகளுடன் திருமலையை கடத்திச் சென்று, அடித்து உதைத்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வழக்கில் ராஜாராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் ராஜாராம் வெளியே வந்துள்ளதால் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.