கோவை: குற்றச் சம்பவங்களைத் தடுக்க, கிராமங்களில் இரவு ரோந்துப் பணியில் இளைஞர்களை கள மிறக்க மாவட்ட காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட் டங்களில், பண்ணை வீடுகளில் வசிக்கும் வயதானவர்களை குறிவைத்து நள்ளிரவு நேரங்களில் நுழையும் மர்மநபர்கள், அவர்களை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்தன. கோவை மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
போலீஸாரின் கணக்கின்படி, கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் பண்ணை வீடுகள் உள்ளன. சுல்தான்பேட்டை, கோமங்கலம், நெகமம், வடக்கிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்ணை வீடுகள் அதிகம் உள்ளன. இருப்பினும், தற்போது பண்ணை வீடுகள், தனி வீடுகள் குறித்து காவல் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். அத்துடன் பொது மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக, குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்டப் பகுதிகளில், தன்னார் வலர்களையும் களத்தில் இறக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘பண்ணை குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம், நள்ளிரவு நேரங்களில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்கக்கூடாது, நள்ளிரவில் யாராவது கதவைத் தட்டினால் உறுதிப்படுத்தாமல் திறக்கக் கூடாது, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், எச்சரிக்கை அலாரம், காம்பவுண்ட் சுவர்களில் பாதுகாப்பு வயர் பொருத்த வேண்டும், பாதுகாப்புக்கு நாய்கள் வளர்க்க லாம், காவல் உதவி செயலி மூலம் போலீஸாரை தொடர்பு கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதேபோல, கிராம இளைஞர்களை களத்தில் இறக்கி, அந்தந்த கிராமங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இளைஞர்களையும், காவல்துறையினரையும் இணைத்து வாட்ஸ் அப் குழு தொடங்கப்படும். இரவு கிராமங்களில் ரோந்து வரும் இளைஞர்கள் சந்தேகத்துக்குரிய நபர்கள், வெளிநபர்கள் வருகை குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு அழைப்பு மூலமாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவிப்பர்.
உஷாராகும் போலீஸார், உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுவர். ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, தன்னார்வ இளைஞர்களின் ரோந்து குற்றங்களைத் தடுக்க உதவியாக இருக்கும்’’ என்றார். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கிராமங்கள் வாரியாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, கிராமங்களின் நுழைவுவாயில், வெளியேறும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்துதல் குறித்து வலியுறுத்தப்படுகிறது.
மேலும், காவல்துறைக்கு உதவியாக, இரவு ரோந்துப் பணியில் களமிறங்க ஆர்வம் உள்ள தன்னார்வ இளைஞர்கள் யார் உள்ளனர் என கேட்டறிந்து அவர்களின் விவரம் சேகரிக்கப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர்களை ஒருங்கிணைத்து போலீஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, ரோந்துப் பணிக்கு களமிறக்கப்படுவர். விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றனர்.
மாநகரிலும் கண்காணிப்பு: மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறும்போது, ‘‘கோவை மாநகரில் வடவள்ளி பகுதியில் பண்ணை வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல், மாநகரில் மூத்த குடிமக்கள் ஏறத்தாழ 1,300 பேர் தனியாக உள்ளனர். இவர்களை கண்காணிக்க, தொடர்ச்சியாக சந்தித்து பேச, உதவி செய்ய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக மூத்த குடிமக்களை சந்தித்து பேசி வருகின்றனர்’’ என்றார்.