ரூபாய் நோட்டு மாலையுடன் வந்த நடிகர் அக்னி ஆழ்வார். 
க்ரைம்

ரூபாய் நோட்டு மாலையுடன் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி மீது புகார் அளித்த நடிகர்

செய்திப்பிரிவு

சென்னை: ரூபாய் நோட்டு மாலை அணிந்தபடி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகரால் பரபரப்பு ஏற்பட்டது. டி.வி. தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் அக்னி ஆழ்வார்(44). இவர் ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்தபடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.

பின்னர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். அதைத்தொடர்ந்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல கோடி ரூபாய் முறைகேடு: பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் பி.என்.சுவாமிநாதன், எஸ்.பி.செந்தில்குமார் ஆகியோர் சம்மேளனத்தின் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை வைப்பு நிதியில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக பல கோடி ரூபாய் பணத்தை முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்மூலம் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அசையும், அசையா சொத்துகளை வாங்கியுள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளரைச் சந்தித்தும் மனு அளித்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT