சென்னை: ஓடும் பேருந்தில் செல்போன் பறித்த பிரபல கொள்ளையன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை, தங்கவேல் கார்டன் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் மோகன் (39).
இவர் கடந்த 5-ம் தேதி பணி முடித்து பென்சில் பேக்டரி பேருந்து நிறுத்தத்திலிருந்து தடம் எண் 44சி மாநகர பேருந்தில் ஏறி பீச் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது அவரது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திருடுபோனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஓடும் பேருந்தில் செல்போனை திருடியது தண்டையார்பேட்டை நேதாஜி நகர் அப்துல் வகாப் (23), அவரது கூட்டாளிகள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சியான் லாரன்ஸ் (23), கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் வினோத் (23) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பேருந்தில் பயணம் செய்யும் நபர்களிடம் செல்போன்களை திருடியதும், சாலையில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்துள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கைது செய்யப்பட்ட அப்துல் வகாப் மீது ஏற்கெனவே 13 குற்ற வழக்குகளும், சியான் லாரன்ஸ் மீது 7 குற்ற வழக்குகளும், வினோத் மீது 9 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.