கோவை: கனிம வளக் கடத்தல் தொடர்பாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கனிமவளத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களால் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கள்ளத்தனமாக கனிமக் கடத்தலில் ஈடுபட்ட 39 வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு புகார் அளித்ததின் பேரில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட கால கட்டங்களில் அரசின் அனுமதியின்றி கனிமங்களை வெட்டியெடுக்கப்பட்ட புலங்கள் கனிமவளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களால் 10 இனங்கள் கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து இனங்களிலும் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959,பிரிவு 36(A)-ன்கீழ் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களால் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியரால் வட்டாட்சியர் நிலை, அலுவலரை தலைவராகக் கொண்ட 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற வழக்கு தொடர்பாக பேரூர் வட்டத்திற்குட்பட்ட ஆலாந்துறை, வெள்ளிமலைப்பட்டிணம், தேவராயபுரம், இக்கரைபோளுவாம்பட்டி, மாதம்பட்டி, தென்கரை, பூலுவப்பட்டி மற்றும் தொண்டாமுத்தூர் கிராமங்களில் ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராத நடவடிக்கைகளை ஆட்சேபித்து மாவட்ட ஆட்சியருக்கு வரப்பெறும் மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படும் இனங்களில் மறு ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கனிமவள கடத்தல் தொடர்பான புகார்களை 1800-2333-995 எண்ணில் தெரிவிக்கலாம். மாதம் ஒரு முறை ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.