கண்​ணப்ப நாய​னார் சிலை 
க்ரைம்

​நாகை கோயி​லில் 15 ஆண்​டு​களுக்கு முன் திருடு​போன கண்ணப்ப நாய​னார் சிலை நெதர்​லாந்​தில் கண்​டு​பிடிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நாகை கோயிலில், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்தில் இருப்பதை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டறிந்துள்ளனர். மேலும், அந்த சிலை ஏலம் விடப்பட இருந்த நிலையில் அந்த முயற்சியும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில் தொன்மை வாய்ந்த கண்ணப்ப நாயனார் உலோகச் சிலை இருந்தது. இச்சிலை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது. இதுகுறித்து, அம்மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2010 ஆகஸ்ட் 8-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இது தொடர்பாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் விசாரணையை முன்னெடுத்தனர். இதில், திருடுபோன கண்ணப்ப நாயனார் சிலை நெதர்லாந்து நாட்டில் உள்ள ஐரோப்பிய நுண்கலை கண்காட்சி 2025-ல் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட நெதர்லாந்து காவல் துறை அதிகாரிகளுக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் கடந்த மார்ச் 18-ம் தேதி அவசர மின்னஞ்சல் அனுப்பினர்.

இதையடுத்து கண்ணப்ப நாயனார் சிலை ஏலம் விடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், அச்சிலையை நெதர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சிலை தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது. ஏலம் விடும் முயற்சியை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டினார்.

கண்ணப்ப நாயனார் சிலையின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.8 கோடி என்றும், இச்சிலை 11 அல்லது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT