அஜித்ராஜ் 
க்ரைம்

சென்னை | பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகன் ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆயுதங்கள் பதுக்கிய வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக, ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். ஒருவர் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க சிலர் திட்டமிட்டதாக தகவல் வெளியானது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி நாகேந்திரனின் தம்பி ரமேஷ் உட்பட உறவினர்களின் வீடுகளில் கடந்த ஜனவரி 7-ம் தேதி புளியந்தோப்பு துணை ஆணையர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, 51 பட்டாக் கத்திகள், 1 வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாகேந்திரனின் தம்பி ரமேஷ் (44) மற்றும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த முருகன் (45), தம்பிதுரை என்கின்ற தமிழரசன் (40), தமிழழகன் (39), கிஷோர் (30), சுகுமார் (29), தனுஷ் (28) உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் நாகேந்திரனின் 2-வது மகன் அஜித் ராஜுக்கும் தொடர்பு இருந்தது. இதையடுத்து, அவர் தலைமறைவானார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT