வண்டலூர் கிரசன்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கொலை செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மணிகண்டன் 
க்ரைம்

வண்டலூரில் தனியார் பல்கலை. ஓட்டுநர் படுகொலை - போலீஸார் விசாரணை

பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் சராசரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்டலூர் அருகே கீரப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (28) டிப்ளமோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர் வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலைக்கழகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மே 4) இரவு பணிக்கு வந்த இவர் கல்லூரியின் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (மே 5) காலை 7:45 மணி அளவில் பைக்கில் வந்த இருவர் மணிகண்டன் குறித்து விசாரித்துள்ளனர். அப்பொழுது ட்ரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இருப்பதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். உடனே அங்கு சென்று உறக்கத்தில் இருந்த மணிகண்டனை பைக்கில் வந்த இருவரும் தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

மணிகண்டனின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் குற்றவாளிகளின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT