க்ரைம்

போதை பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்​பட்ட ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் கூட்டாளியுடன் டெல்லியில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர், கூட்டாளியுடன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க காவல் ஆணையர் அருண் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு சிறப்புப் பிரிவை அண்மையில் உருவாக்கினார். இப்பிரிவு போலீஸார் காவல் நிலைய போலீஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர். அதன்படி, அண்ணாசாலை போலீஸாருடன் கடந்த மார்ச் 9-ம் தேதி ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை - சுமித் சாலை சந்திப்பில் கண்காணித்தனர்.

அப்போது, அந்த வழியாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்தி வந்ததாக விக்னேஷ்வரன்(24), பாலச்சந்திரன்(28), யுவராஜ் (25), சுகைல் (24), பிரவீன் (31) ஆகிய 5 பேர் பிடிபட்டனர். அவர்களை அண்ணாசாலை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நிக்கில் (24) மற்றும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 5 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப் பொருள் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த கோட் டி ஐவரி என்கிற அபவ்(39) டெல்லி மேற்கு, சந்தர் விஹார் பகுதியில் தங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் டெல்லி சென்று, அபவ்வை கைது செய்தனர்.

போதைப் பொருள் விற்பனையில் அவருக்கு உதவியாக இருந்த டெல்லியை சேர்ந்த ராகுல் (19) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 15 கிராம் ‘கொக்கைன்’, 7 கிராம் ‘ஹெராயின்’, 3 கிராம் ‘மெத்தம்பெட்டமைன்’ மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் தனிப்படை போலீஸார் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் 2 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT