உமேஸ்வரன் 
க்ரைம்

குன்னூர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூர் அருகே 5 பழங்குடியின பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கொம்பையைச் சேர்ந்தவர் உமேஸ்வரன் (26). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், ஊர்க்காவல் படையில் சில காலமும், வேட்டைத்தடுப்பு காவலராக சில காலமும் பணியாற்றியுள்ளார்.

அந்த வேலைகளை கைவிட்டுவிட்டு அவரது ஊரிலேயே பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். கடைக்கு பொருள்கள் வாங்க வரும் பள்ளி மாணவிகளுடன் பேசி, பழகி வந்த உமேஸ்வரன், செல்போன் ரீசார்ஜ் செய்ய வரும் மாணவிகளின் செல்போன் எண்களை குறித்து வைத்துக்கொண்டு, தொடர்பு கொண்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி என 5 சிறுமிகளை மூளைச்சலவை செய்து பாலியில் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

பாலியல் ரீதியாக ஏமாற்றப்படுவதை அறிந்த சிறுமிகள், பெற்றோர் உதவியுடன் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 5 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மகாலட்சுமி, போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து உமேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT