பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று பைக்கில் சென்ற ஒருவரிடம் அடையாள அட்டையை சரிபார்க்கும் பாதுகாப்பு படையினர்.படம்: பிடிஐ 
க்ரைம்

விமானத்தில் தீவிரவாதிகள் செல்வதாக வதந்தி: மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக சென்னை விமான நிலையத்துக்கு பொய் தகவல் அளித்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து கடந்த 3-ம் தேதி காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில், ‘காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 தீவிரவாதிகள் அந்த விமானத்தில் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் இருக்கின்றன’ என்று குறிப்பிட்டு, சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு ஒரு இ-மெயில் வந்தது.

இதுகுறித்து கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பகல் 12 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு படையினர், அதிரடிப் படையினர், விமானத்தை சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினர். பயணிகளை தனித்தனியாக சோதனை நடத்தி, அவர்களது விவரங்களை சேகரித்தனர். சோதனை முடிவில், தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, இ-மெயில் அனுப்பி வதந்தி பரப்பிய மர்ம நபர் குறித்து சென்னை விமான நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT