சென்னை: நகை வாங்குவதுபோல் நடித்து வைர வியாபாரியிடம் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரபல வைர நகை வியாபாரி சந்திரசேகர். இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரிடம், மற்றொரு வியாபாரி ஒருவர் ரூ.20 கோடி மதிப்பில் மொத்தமாக வைரம் வேண்டும் என கேட்டுள்ளார். அவற்றை வடபழனியில் உள்ள பிரபலமான நட்சத்திர ஓட்டலுக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, சந்திரசேகர் தன்னிடமுள்ள ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகளுடன் நேற்று மாலை சென்றார். நகைகளை பெற்றுக் கொண்ட அந்த வியாபாரி, அங்கேயே சிறிது நேரம் காத்திருங்கள் வெளியே நிறுத்தப்பட்டுள்ள காரிலிருந்து பணத்தை எடுத்து வருகிறேன் என்று நகையுடன் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. நீண்ட நேரம் வராததால் சந்திரசேகர் வெளியே வந்து பார்த்தார். அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக இதுதொடர்பாக வடபழனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டல் சென்று அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து நகையுடன் தப்பிய நபரை அடையாளம் காணும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.