க்ரைம்

கேரளா போலீஸாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கேரள மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சஜீவன் அத்துல் (31). இவர் மீது மோசடி,கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சூர் காவல் துறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு பதிவானது.

அவர் போலீசில் சிக்காமல் வெளிநாடு தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த போலீசா, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த சஜீவன் அத்துல் ஆவணங்களை சோதனை செய்த போது, அவர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், திருச்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சூரில் இருந்து போலீசார் சென்னை விமான நிலையம் விரைந்து வந்து, சஜீவன் அத்துல் என்பவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT