புதுச்சேரி: வாட்ஸ் அப் தகவலால் போலி பங்குச் சந்தையில் முதலீடு செய்து ரூ.14 லட்சத்தை புதுவை அரசு ஊழியர் இழந்தது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை லாஸ்பேட்டையைச் சேர்ந்த 43 வயது அரசு ஊழியர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து திறமையாக சம்பாதிப்பது எப்படி? மிக அதிக லாபத்தை தருகின்ற பங்குகள் எவை? நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே மாதத்தில் பல கோடி ரூபாயை சம்பாதிக்க பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது எப்படி? போன்ற தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள் என்று குறுந்தகவல்கள் வந்தன.
இந்த தகவலை நம்பி அந்த அரசு ஊழியர் அந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு பங்குச் சந்தை பற்றிய பல்வேறு தகவல்கள் 15 நாட்களாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பங்குச் சந்தை பற்றி தமக்கு அதிகம் தெரிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் அனுப்பிய பங்குச் சந்தை லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
அவருக்கு ரூ.35 லட்ச லாபம் வந்துள்ளதாக அவருடைய வாட்ஸ் அப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு வந்த லாபத்தை எடுக்க அந்த அரசு ஊழியர் முயற்சி செய்தபோது வரி கட்ட வேண்டும் வருமான வரி கட்ட வேண்டும், ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று தகவல் வர சந்தேகம் அடைந்த அவர் புதுவை சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பிறகு சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்து இது இணைய வழி மோசடிக்காரர்கள் வேலை. நீங்கள் அவர்கள் அனுப்பிய போலி பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளீர்கள் என்று கூறினர். இதன் பிறகுதான் உண்மையான பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்யவில்லை என்பதும் இணைய மோசடிக்காரர்களுக்கு பணத்தை அனுப்பியதும் அரசு ஊழியருக்கு தெரிந்தது
பின்பு அவர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வரும் முதலீடுகளையோ, வேலை வாய்ப்புகளையோ நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் மீண்டும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.