க்ரைம்

தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை தடுக்க 41 பறக்கும் படை!

ஆர்.ஆதித்தன்

தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் சுமார் 41 பறக்கும் படைகள், மருந்து ஆய்வாளர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சின்தடிக் என்ற வேதி போதை மருந்து, போதை மாத்திரைகளின் பயன்பாடு மற்றும் கடத்தல் ஆகியவற்றின் பயன்பாட்டை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் தமிழக அரசு மற்றும் காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் மட்டும் தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறை மூலம் பறக்கும் படை உள்ளது. இந்த பறக்கும் படையினரே மாநிலம் முழுவதும் போதை மருந்துகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மாவட்ட வாரியாக சென்று கண்காணிப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.

இந்நிலையில், "போதைப் பழக்கத்தை உண்டாக்கும் மருந்துகளை பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும், போதை தரக்கூடிய மருந்துகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகவும், தமிழ்நாடு முழுவதும் மருந்து ஆய்வாளர்களை கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும்" என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இது குறித்து, தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் எம்.என்.ஸ்ரீதர் கூறும்போது, "தமிழகத்தில் போதை மருந்து பயன்பாட்டை தடுக்க மாநிலம் முழுவதும் 41 பறக்கும் படைகள் அமைக்கப் பட உள்ளன. ஒவ்வொரு பறக்கும் படையில் 2 மருந்து ஆய்வாளர்கள் இடம் பெறுவார்கள். இது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும்.

மாவட்டங்களில் உள்ள மண்டல அலுவலகங்களில் இருந்து தகவல் பெறப்பட்டு மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநர் உத்தரவின் கீழ் பறக்கும் படையினர் சோதனை நடத்துவார்கள். உதாரணத்திற்கு கோவை மண்டலத்தில் இருந்து போதை மருந்து, போலி மருந்து ஆகியவை குறித்து புகார் வந்தால் அருகில் உள்ள மண்டலத்தில் உள்ள பறக்கும் படையினர் வந்து சோதனையிடுவார்கள்.

இந்த சோதனை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் மேற்பார்வையில் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் மூலம் நடத்தப்படும். மேலும் போதை மருந்துகளை பறிமுதல் செய்து, நீதிமன்ற மற்றும் காவல்துறை மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இது குறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் எஸ்.மாரிமுத்து கூறும்போது, "போதை மருந்து, போலி மருந்து பயன்பாட்டை தடுக்க பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்வார்கள். கூரியர் நிறுவனங்கள், மொத்த கொள்முதல் மருந்து கடைகள், ஆன்லைன் மருந்து வர்த்தகம் ஆகியவற்றை கண்காணித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT