விருகம்பாக்கத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதி 9 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.
விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் துறைமுகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தன்வித் (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சிறுவன் தன்வித் நேற்று முன்தினம் இரவு நடேசன் நகரில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார், சிறுவனின் சைக்கிள் மீது மோதியது.
இதில் சிறுவனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட கார் ஓட்டுநர், சிறுவனை மீட்டு அதே காரிலேயே அழைத்துச் சென்று வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போக்கு வரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விபத்து ஏற்படுத்திய கார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போதைய மாநில தேர்தல் ஆணையருமான ஜோதி நிர்மலா சாமியின் கார் என்பதும், காரை ஓட்டி வந்தது சாலி கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (32) என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.