ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஏமாற்றி சென்னையில் பெண் உட்பட 2 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சஜித் (55), கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது: எனது வாட்ஸ் - அப் எண்ணுக்கு வர்த்தகம் தொடர்பான இணையதள லிங்க்குடன் சேர்ந்து ஒரு குறுஞ் செய்தி வந்தது. அதை கிளிக் செய்த போது, அது வேறொரு இணைப்புக்கு சென்றது.
பின்னர், என்னை தொடர்பு கொண்ட ஒருவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றார். அதை நம்பி பல தவணையாக ரூ.17.10 லட்சம் அனுப்பினேன். அவர் லாப தொகை தராமல் மோசடி செய்துவிட்டார். அவரிடம் இருந்து என் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதேபோல, அயனாவரத்தை சேர்ந்த சித்ரா (44) என்ற பெண் ரூ.4.59 லட்சத்தை இழந்ததாக புகார் கூறியிருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருவரிடமும் மோசடியில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம் வெள்ளையம் பட்டு பகுதியை சேர்ந்த கலையரசன் (40) என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரை போலீஸார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போன், 8 சிம் கார்டுகள், வங்கி பாஸ் புக், காசோலை, ஏடிஎம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.