கள்ளக்குறிச்சி: ‘மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனமே, தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சென்ற மதுரை ஆதீனத்தின் கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கியது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறை அதன் உண்மைத் தன்மைக் குறித்து இன்று (மே 3) விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனம் மடாதிபதி, காரில் சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- சேலம் சாலை ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீஸார், சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் இரு தரப்பினர்களும் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக ரவுண்டானா அருகே சென்றபோது, சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இதில் மதுரை ஆதினம் பயணித்த காரின் பின்புறம் சிறிய அளவில் சேதாரமும், மற்றொரு காரின் முன்புறம் சிறிய அளவிலான சேதமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவர்களாகவே காலை சுமார் 10 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனமே, தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.