க்ரைம்

சென்னை | 7 ஆண்​டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் கூட்​டாளி கைது

செய்திப்பிரிவு

சென்னை: 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர், அமுதம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (51). மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2018 ஏப்ரல் 14-ம் தேதி கொடுங்கையூர் டி..எச்.ரோடு, சின்னாண்டி மடம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் கத்தி முனையில் நடராஜனிடம் வழிப்பறி செய்து தப்பினர்.

இந்த விவகாரம் குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது கொலை, திருட்டு, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து உட்பட சுமார் 37 குற்ற வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாம் சரவணன், அவரது கூட்டாளி ஓட்டேரி திருவிக நகரைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது.

2008 மே 9-ம் தேதி பாம் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில் ராஜேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான ராஜேஷ் மீது ஏற்கெனவே ஒரு கொலை, ஒரு கொலை முயற்சி உட்பட 5 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாம் சரவணன் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், அண்மையில் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT