க்ரைம்

ஊட்டி | நிர்மலா சீதாராமன் பேசுவதுபோல வந்த போலி வீடியோவை நம்பி ரூ.33 லட்சம் இழந்த காங்கிரஸ் பிரமுகர்

செய்திப்பிரிவு

ஊட்டி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்லைன் முதலீடு தொடர்பாக பேசுவதுபோல வந்த வீடியோவை நம்பி பணத்தை முதலீடு செய்த காங்கிரஸ் பிரமுகர் ரூ.33 லட்சத்தை இழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயது காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைன் வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரின் வாட்ஸ்-அப்-க்கு ‘லிங்க்’ ஒன்று வந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர் ரிலையன்ஸ் அம்பானி ஆகியோர் ஆன்லைன் முதலீடு குறித்து பேசும் வீடியோ காட்சியைப் பார்த்த அவர், அந்த லிங்க்-ல் இ-மெயில் ஐடியைப் பகிர்ந்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே அவரைத் தொடர்பு கொண்ட நபர்கள் சிலர், ‘குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர். அதை நம்பி பல தவணைகளாக ரூ.33 லட்சம் முதலீடு செலுத்தியுள்ளார்.

பின்னர், செலுத்திய தொகையை இரட்டிப்பாக திரும்ப கேட்டபோது மழுப்பலான பதில்கள் வந்துள்ளன. முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “குவாண்டம் ஏ.ஐ. மோசடி எனப்படும் இந்த வகையான மோசடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோவை உருவாக்கிய மோசடி கும்பல், அந்த லிங்க் மூலம் இந்த நபரின் விவரங்களைப் பெற்றுள்ளனர்.

இரட்டிப்பு லாப ஆசை, டாலரில் முதலீடு, கிரிப்டோ கரன்சி, செபி, ரிசர்வ் வங்கி, முதலீட்டு வரி, பாதுகாப்பு வரி என ஏதேதோ பொய்களைச் சொல்லி மொத்தம் ரூ.33,10,472 தொகையை வங்கி பரிவர்த்தனைகள் மூலம் பறித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பேராசையால் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT