திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வாடகை காரில் 2,520 போதை மாத்திரைகளை கடத்தியது தொடர்பாக, சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி நோக்கி வந்த வாடகை காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில், காரில் போதை மாத்திரைகள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கார் மற்றும் அதில் பயணம் செய்த இளைஞர்கள் 4 பேரை அழைத்துச் சென்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கமல் (20) என்பவர் திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று தனியார் நிறுவன வாடகை காரை புக் செய்து கொண்டு திருப்பதிக்கு சென்றுள்ளார்.
அங்கு, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் போதை மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திருப்பதிக்கு ரயிலில் வந்து அங்கு காத்திருந்த அவரது நண்பர்கள் சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (21), சக்திவேல் (21), ரூபன் (17) ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக் கொண்டு சென்னை திரும்பும் வழியில் நேற்று பொன்பாடி சோதனைச் சாவடியில் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
மேலும், போலீஸாருக்கு சந்தேகம் வராத வகையில், கமல் என்பவர் அவரது உறவினரின் 7 வயது குழந்தையை அவருடன் காரில் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2,520 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போதை மாத்திரைகள் கடத்தல் தொடர்பாக பிடிபட்டவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.