க்ரைம்

புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக் கொலை 

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி அடுத்த கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமா சங்கர் (வயசு 40). இவர் புதுச்சேரி மாநில பாஜகவின் இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். கருவடிக்குப்பம் சித்தானந்த கோயில் அருகே பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மாட்டினுக்கு இன்று பிறந்தநாள் விழாவை ஒட்டி ஏற்படுகள் செய்து வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு கருவடிகுப்பம் பகுதியில் ஏற்பாடுகளை பார்வையிட சென்று கொண்டிருந்த உமாசங்கரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் லாஸ்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, உமாசங்கர் உடலை கைப்பற்றினர். அவரது உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டம் நீடித்தது. டி.ஐ.ஜி சத்திய சுந்தரம் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அடுத்து இன்று அதிகாலை பிரேத பரிசோதனைக்காக உடலை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட உமா சங்கர் மீது புதுச்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மேலும் பல எதிரிகள் அவருக்கு உள்ளதால் அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT