சென்னை, புழல் மத்திய சிறையில் உள்ள தண்டனை, விசாரணை, மகளிர் பிரிவுகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இதில், விசாரணை பிரிவில் கொலை, கொள்ளை, வழிப் பறி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வப்போது சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட மொபைல் போன்கள், கஞ்சா உள்ளிட்டவற்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவு வளாகத்தில் நேற்று முன் தினம் சிறை காவலர்கள் மோப்ப நாயுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தில் 42 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக புழல் மத்திய சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு வெளியில் இருந்து, கஞ்சா பொட்டலத்தை வீசியது யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.