மன்சூர் அலி 
க்ரைம்

காஷ்மீர் தாக்குதலில் பாஜக நிர்வாகி கைது என சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட யூடியூபர் கைது

செய்திப்பிரிவு

காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக, சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்ட திருச்சி யூடியூபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் மன்சூர் அலி(26). யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘‘தலித் ஹுசைன் ஷா என்பவர் ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் ஐ.டி. பிரிவு பொறுப்பாளராக உள்ளார். அவர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றுகிறார்” என்று வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் க்ரைம் தலைமைக் காவலர் ராஜசேகர் அளித்த புகாரின்பேரில், ஆள்மாறாட்டம் செய்து, பாஜக நிர்வாகியின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாகப் பதிவிட்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், அரசு மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும், மத அடிப்படையில் பகைமையை உருவாக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் வீடியோ வெளியிட்டதாக சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் சண்முகவேல் வழக்குப் பதிவு செய்து, மன்சூர் அலியை நேற்று முன்தினம் கைது செய்தார்.

விசாரணையில், இந்து கடவுளான ராமர் மற்றும் ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக மன்சூர் அலி மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவில் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அப்போது அவர் வெளிநாட்டில் இருந்ததால், தற்போது அந்த வழக்கு தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT