ஆமத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இதேபோல, ஓமலூர் அருகே நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, ஆமத்தூர் அருகேயுள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக விபத்து நேரிட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள் (51), விஜயமுருகன் மனைவி கலைச்செல்வி (33), கூமாபட்டியைச் சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி (45) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த பாக்கியலட்சுமி (58), ராமசுப்பு (43), லட்சுமி ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார், உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நேரிட்ட இடத்தில் எஸ்.பி. கண்ணன், சார் ஆட்சியர் பிரியா மற்றும் அதிகாரிகள் சாரணை மேற்கொண்டு, பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், மேலாளர் ராஜேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜேஷ், சுப்புராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்சென்றபோது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி கொட்டமேடு செல்வராஜ் (29), குருவாலியூர் தமிழ்ச்செல்வன் (11), கார்த்தி (11) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கொட்டமேடு லோகேஷ்(20) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விபத்து தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.