பொள்ளாச்சி: சென்னையில் இருந்து ஆழியாறுக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 28 பேர், கல்லூரி கிளினிக்கல் தெரபிஸ்ட் சந்தோஷ்(23) தலைமையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் நேற்று காலை ஆழியாறுக்கு சுற்றுலா சென்றனர்.
ஆழியாறு அணை அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, பிசியோதெரபி 4-ம் ஆண்டு பயிலும் திருவெற்றியூரைச் சேர்ந்த ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), தென்காசி ரேவந்த்(21), 3-ம் ஆண்டு பயிலும் சென்னை தருண் விஸ்வரங்கன்(19) ஆகியோர் நீரில் மூழ்கினர். அருகில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.
பின்னர், அப்பகுதி மக்கள் உதவியுடன் 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து ஆழியாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “ஆழியாறு ஆற்றில் உள்ள பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை, வடக்கலூர் 5 தடுப்பணைகளில் நீரின் வேகம் குறைவாகவும், ஆழம் அதிகமாகவும் காணப்படும். இந்த அணைக்கட்டுகளில் உள்ள ஆபத்தை உணராமல், ஆற்றில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றும், சேற்றில் சிக்கியும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அணைக்கட்டு பகுதியில் குளிக்க தடை விதித்து காவல் துறை சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அணைக்கட்டு மற்றும் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்” என்றனர்.