சென்னை: கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தாக்கியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சந்துரு (38). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் (37). இவர்கள் இருவரும் தவெக பிரமுகர்கள். இருவரும் பூண்டி தங்கம்மாள் தெருவில் டபிள்யூ பிளாக் அருகே கடந்த 20-ம் தேதி நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த தவெக டிஜிட்டல் பேனர் அருகே சில சிறுவர்கள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த இருவரும், கிரிக்கெட் பந்து பட்டால் டிஜிட்டல் பேனர் கிழிந்துவிடும், எனவே அங்கு யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாது எனக் கூறி, சிறுவர்கள் விரட்டிவிட்டுள்ளனர்.
மேலும் இருவரும், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சிறுவன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர், காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்துருவையும், தினகரனையும் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.