சேலம்: சேலத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 321 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சேலம், நெத்திமேடு பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி வைத்து, பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக செவ்வாய்ப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் நெத்திமேடு, சந்தைப்பேட்டையில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த காரில் இருந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (29), மோகன் (28), இம்ரான் (30) என்பதும், அவர்களது காரில் குட்கா பதுக்கி வைத்திருந்ததை போலீஸார் கண்டு பிடித்தனர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில், நெத்திமேடு, பாஞ்சாலி நகரில் உள்ள மாரிச்செல்வத்தின் வீடு அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்து, குடோனில் சோதனையிட்டனர்.
குடோனில் பதுக்கி வைத்திருந்த 321 கிலோ குட்கா பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் கைது செய்த மாரிசெல்வம், மோகன், இம்ரான் ஆகியோரிடம் குட்கா எங்கிருந்து, யாரிடமிருந்து கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.