சென்னை: மனைவியை திட்டிய ஆத்திரத்தில், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலு (50).
இவரது மகனான கார்த்திக் (29) அதே குடியிருப்பில் 11-வது தளத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார். தந்தை பாலு குடிபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மகனிடமும், மருமகளிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல பாலு, மகன் வசித்துவரும் தளத்துக்கு சென்று மகனிடம் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். மேலும், மருமகளையும் அவதூறாக பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்திவிட்டார். பின்னர், தந்தையை குத்திவிட்டோமே என்ற பதற்றத்தில் உடனடியாக அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலு உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசின்பாலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். ``மது போதையில் தந்தை தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தேன். மருத்துவர்கள் காயம் குறித்து கேட்டபோதும் இதையேதான் சொன்னேன்'' என போலீஸாரிடம் கார்த்திக் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
காயத்தின் தன்மையும், கார்த்திக் கொடுத்த வாக்குமூலமும் முரண்பாடாக இருந்தது. இதையடுத்து, அவரை தனியாக அழைத்துச் சென்று தங்கள் பாணியில் போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் மனைவியை திட்டிய ஆத்திரத்தில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டேன் என கார்த்திக் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.