சென்னை: பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்டதாக சைபர் க்ரைம் மோசடி கும்பலைச் சேர்ந்த 14 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் சென்னை, டெல்லி, கேரளாவில் பிடிபட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் முகநூல் பக்கம் ஒன்றில், `குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும்' என்று கூறப்பட்டிருந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து, அதை உண்மை என நம்பி ரூ.87 லட்சத்து 92 ஆயிரம் முதலீடு செய்து பணத்தை இழந்திருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் தமிழக காவல் துறையின் மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து சென்னை வளசரவாக்கம் சஹாபுதீன் (44), கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாஹித் அப்ரிடி (27), சென்னை கே.கே.நகர் முகமது உஸ்மான் (67), சிதம்பரத்தைச் சேர்ந்த வஜகுல்லா (50), அவரது மனைவி பாத்திமா (45), சென்னை கே.கே.நகர் முகமது முனாவர் (41), அவரது மனைவி ஜமீலத் நசீரா (34) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இதேபோல், கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாக மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் டெல்லியைச் சேர்ந்த ஆஷூ குமார் (29), அனுஜ் குமார் ஜா (21), சுபம் குமார் (22) ஆகிய 3 பேரை டெல்லியில் கைது செய்தனர்.
இதேபோல் மும்பை போலீஸ் எனக்கூறி, ரூ.2,725 கோடி மோசடி செய்துவிட்டதாக வேலூரை சேர்ந்தவரை மிரட்டி, டிஜிட்டல் கைது செய்து பணம் பறித்த கேரளாவைச் சேர்ந்த அகில், ஆஷிக், முகமது அஜ்மல் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மோசடியான விளம்பரம் மற்றும் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மீறி மோசடி நடைபெற்றால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in-ல் புகாரை பதிவு செய்யலாம் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.