க்ரைம்

கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: கழுத்து நரம்பு அறுப்பு குறித்து கூகுளில் தேடிய மனைவி

வேட்டையன்

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவி பல்லவி கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், பல்லவியின் கூகுள் தேடல் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கழுத்து பகுதியில் உள்ள நரம்பு அறுக்கப்படுவதால் ஒருவர் எப்படி உயிரிழக்கிறார் என்பதை கூகுளில் பல்லவி தேடியுள்ளார். சரியாக கொலை நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக இதை அவர் தேடி உள்ளார் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பல்லவி வைக்கப்பட்டுள்ளார். கொலை நடந்த வீட்டுக்கு அவரை போலீஸார் திங்கள்கிழமை அன்று அழைத்து சென்று குற்றம் குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர். மேலும், விசாரணையின் போது குடும்ப வன்முறை காரணமாக கொலை நடந்துள்ளது என்பதை காவல் துறையினர் அறிந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு முன்பாக வாட்ஸ்-அப்: முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக வாட்ஸ்அப் குரூப்பில் சில மெசேஜ்களை பல்லவி பகிர்ந்துள்ளார். அதில் தானும், தனது மகள் கீர்த்தியும் சித்திரவதை அனுபவித்து வருவதாகவும், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை வளையத்தில் உள்ள முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷின் மகள் கீர்த்தி, தற்போது மனநல ஆலோசனையில் உள்ளார்.

பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (68). கடந்த‌ 1981-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அவர் தேர்ச்சி பெற்றார். கர்நாடக காவல் துறையில் ஐஜி ஆகவும், டிஜிபியாகவும் பணியாற்றி கடந்த 2017-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட்டில் மனைவி பல்லவி, மகள் கீர்த்தியுடன் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT