சென்னை: ரூ.1000 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாக ரூ.35 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு துபாய் தொழில் அதிபர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை அறிமுகம் செய்துவைத்த பைனான்ஸ் அதிபரை பணம் கொடுத்து ஏமாந்தவர் கடத்தி தாக்கினார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு, நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் எட்வின் பிரான்சிஸ் (61). பைனான்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 18-ம் தேதி இரவு அண்ணா நகர், கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகிலுள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த கும்பல், எட்வின் பிரான்சிஸை காரில் கடத்திச் சென்றது.
பின்னர், மாதவரம் பகுதியில் உள்ள ஓர் ஓட்டலில் அடைத்து வைத்து தாக்கி, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகள், மணிபர்ஸ், ஜி-பே மூலம் ரூ.25 ஆயிரம், செல்போன், வீட்டுப் பத்திரம் மற்றும் நிரப்பப்படாத 8 காசோலைகள் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு, மீண்டும் கேட்கும்போது பணம் தர வேண்டும் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் எட்வின் பிரான்சிஸ் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டு, பணம் உள்ளிட்டவற்றை பறித்து தப்பியது கொடுங்கையூரைச் சேர்ந்த அமினுதீன் முகமது (32) தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அமினுதீன் முகமதுவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
கடத்தல் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: எட்வின் பிரான்சிஸ் அவருக்கு தெரிந்த ரிஷி பானர்ஜி என்பவரை தற்போது கைது செய்யப்பட்ட அமினுதீன் முகமதுவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அமினுதீன் முகமது மற்றும் வேளச்சேரி பகுதியில் உள்ள ஓர் அறக்கட்டளையின் நிர்வாகி மொய்தீன் ஆகியோர் ரிஷி பானர்ஜியை துபாயில் சந்தித்து, தங்களது அறக்கட்டளைக்கு ரூ.1,000 கோடி நன்கொடை பெற்றுத் தரும்படி கேட்டுள்ளனர்.
இதற்கு ரிஷி பானர்ஜி ரூ.35 லட்சம் கமிஷன் கேட்டுள்ளார். அதன்படி அமினுதீன் முகமது ரூ.35 லட்சத்தை ரிஷி பானர்ஜியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். ஆனால், உறுதியளித்தபடி நன்கொடை பெற்றுக் கொடுக்கவில்லை. மேலும், ரிஷி பானர்ஜி தலைமறைவானார்.
இதையடுத்து, அமினுதீன் முகமது மற்றும் மொய்தீன் ஆகியோர், ரிஷி பானர்ஜியை அறிமுகம் செய்து வைத்த எட்வின் பிரான்சிஸை கடத்தி தங்களது பணம் ரூ.35 லட்சத்தை பெற்றுத் தரும்படி கேட்டு மிரட்டி தாக்கி பணம், நகையை பறித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மொய்தீன் உட்பட மேலும் சிலரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.