தாராபுரம்: தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்தபோது கோவை ஆயுதப்படை காவலர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள டி. காளிபாளையத்தில் வசிப்பவர் ராஜா. கோவை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றியவர் சரவணன். ஆயுதப்படையில் முதன்மை காவலராக இருந்துள்ளார். இன்று (ஏப்.21) விடுப்பு எடுத்துக்கொண்டு ராஜாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின் இருவரும் அமராவதி ஆற்றில் உள்ள காமாட்சி அம்மன் சுனை என்ற இடத்தில் வெய்யிலின் தாக்கத்தை போக்கும் விதமாக குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது ராஜா மீன் பிடிக்க சென்றிருக்கிறார். அப்போது, சரவணன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கிய சரவணனின் குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சரவணனை தராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.