மதுரை: மதுரையில் 2 நாளில் 3 கொலைகள் நடந்துள்ளது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவத்தால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை உத்தங்குடி அருகிலுள்ள உலகனேரி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ் (27). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டு வாசல் அருகே நின்று கொண்டிருந்தபோது, மதுபோதையில் அங்கு வந்த ஒருவர் திடீரென அபினேஸுடன் தகராறு செய்தார்.
பின்னர் விறகு கட்டையால் தாக்கியுள்ளார். மயங்கி கீழே விழுந்த நிலையில் மீண்டும் கட்டையால் முகத்தை சிதைத்து கொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். ‘இக்கொலையை நான் தான் செஞ்சேன் , எல்லோருக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் என்னை நெனச்சாலே எல்லோருக்கும் பயம் வரும்’ என கொலையாளி கூறி போலீஸாருக்கு சவால் விடும் வகையில் அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், மாடு வளர்ப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தனிப்படை போலீஸார் கொலையாளியை தேடுகின்றனர். கொலையுண்ட அபினேஷ், கொலையாளி மீது சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் காலை மதுரை ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் கட்டிடத்தொழிலாளி அழகுபாண்டியை கொலை செய்தார். வாடிப்பட்டியில் சரவணபாண்டி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. 2 நாளில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்திருப்பது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.